Search This Blog

Monday, November 11, 2019

அயோத்தி வழக்கு இவ்வளவு ஆண்டுகளாக உயிர்ப்புடன் வைக்கப்பட்டு வந்தது எப்படி? - விரிவான தகவல்கள்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்துக்கள் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து சனிக்கிழமை உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் மூலம், 70 ஆண்டு காலமாக இருந்த நில உரிமை வழக்கிற்கு முடிவு ஏற்பட்டுள்ளது.
சமாதானம் செய்யும் முயற்சியாக, 1993 பிப்ரவரியில் மத்திய அரசால் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்துக்கு வெளியே புதிய மசூதி கட்டிக் கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஐந்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் உருவாக்கப்படும் தனித்தனி அறக்கட்டளைகள் மூலம் கோவில் மற்றும் மசூதி கட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது என்பது அரசியல் கட்சிகளின், குறிப்பாக ஆளும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற அதன் சங் பரிவார் அமைப்புகள் மற்றும் சிறிய அமைப்புகளால் வாக்குகளை ஈர்ப்பதற்கான பிரச்சினையாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஒவ்வொரு முறை அயோத்தி பிரச்சினையை மக்கள் மத்தியில் எழுப்பும் போதும், ரத்தக்களரியும், சமூக வெறுப்பு செயல்களும் நிகழ்ந்தன என்பது உண்மை. கடவுள் ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டும் நோக்கம் நிறைவேறும் வரையில் இந்த விஷயம் மக்கள் மனதில் உயிர்ப்புடன் வைக்கப்பட்டு வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, ஒய்.வி. சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட ஐந்து நீதிபதிகள் அமர்வு இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டியுள்ளது. மத நம்பிக்கையை அரசியல் சட்ட உரிமையாக எடுத்துக் கொண்டு, இதில் இந்துக்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மசூதி 1528ல் கட்டப்பட்ட பிறகு, 325 ஆண்டுகளாக அதற்கு சொந்தம் கொண்டாடி வந்தமைக்கு முஸ்லிம் தரப்பினர் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றும், அந்த காலகட்டத்தில் அங்குத் தொடர்ச்சியாக `வழிபாடு' நடந்து வந்ததற்கு எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்க முடியவில்லை என்றும் 1045 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பங்குத் தந்தை ஜோஷப் டையபென்தாலர் மற்றும் மோன்ட்கோமெரி மார்ட்டின் ஆகியோர் எழுதிய பயணக் கட்டுரைகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. ``கடவுள் ராமர் பிறந்த புனித இடம் என்று இந்துக்களின் நம்பிக்கை உள்ளது'' என்று அவற்றில் உள்ளதை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.
இந்தியத் தொல்லியல் பராமரிப்புத் துறையின் விரிவான அறிக்கையையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. ``12 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த கட்டுமானங்கள் பூமிக்கடியில் இருந்தன'' என்றும், அது இந்து பூர்விகத்தைக் கொண்டவையாக இருந்தன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அங்கு இந்துக் கோவில் இருந்ததா என்பதை தொல்லியல் துறை அறிக்கை உறுதியாகக் கூறவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
அங்கு மசூதி இருந்த நிலையிலும், சர்ச்சைக்குரிய இடத்தில் உள் மற்றும் வெளிப் பகுதிகளுக்கு இந்துக்கள் உரிமை கோரி வந்தனர் என்பதைக் காட்டுவதற்காக, பல்வேறு வாய்வழி சாட்சியங்கள் மற்றும் பயணிகளின் குறிப்புகள் என்ற வகையில், போதிய ஆதாரங்களை இந்து தரப்பினர் முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
``இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் இடத்தில் இஸ்லாமிய கட்டுமானம் இருந்தபோதிலும், 1856-57க்கு முன்பிருந்த கட்டுமான பகுதிக்குள், அவர்களுடைய வழிபாட்டைத் தடுப்பதாக இருக்கவில்லை'' என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
``நீண்டகாலம், தொடர்ந்து, தடைப்படாத வகையில் ராமர் `பீடத்தில்' வழிபாடு செய்து வந்ததன் மூலம் இந்த நிலத்திற்கு வெளிப்பகுதியில் உள்ள இடத்தையும், மத முக்கியத்துவம் வாய்ந்த மற்ற விஷயங்களையும் அனுபவித்து வந்ததை இந்துக்களின் தரப்பினர் தெளிவாக நிரூபித்துள்ளனர்'' என்று கூறி அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அயோத்தி
இருந்தபோதிலும் 1949 ஆம் ஆண்டில் மசூதியில் சிலைகளை நிறுவியது ``தீவிர சட்டவிரோத செயல்'' என்றும், அது ``புனிதத்தை அவமதிக்கும் செயல்'' என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 1858 ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்பகுதிக்கு உரிமை கோரி சர்ச்சைகள் நிலவியபோதிலும், மசூதியை முஸ்லிம்கள் கைவிட்டுவிட்டதாகவோ அல்லது `நமாஸ்' செய்வதை நிறுத்திவிட்டதாகவோ நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை'' என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பூமிக்கு அடியிலிருந்த கட்டமைப்புகள் 12 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று முதன்மையான தொல்லியல் துறையின் கண்டறிதல்களைச் சார்ந்து நீதிமன்றம் பரிசீலித்துள்ளது. அந்தப் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட மற்ற கோவில்கள் மற்றும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்த கோவில்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அங்குத் தோண்டி எடுக்கப்பட்ட கட்டுமானங்கள் மற்றும் மசூதியின் அஸ்திவாரங்கள் மற்றும் அதன் கட்டடக் கலை அம்சங்கள் இந்த மத பூர்விகத்தைக் கொண்டவையாக இருக்கலாம் என்று தெரிகிறது என்று தொல்லியல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
``அங்கு மசூதி இருந்தது என்பதை ஆதாரங்கள் காட்டினாலும், அது கடவுள் ராமரின் பிறந்த இடம் என்பதால் அங்கு இந்து வழிபாட்டைத் தடுக்க முடியாது. இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் இடத்தில் முஸ்லிம் கட்டுமானம் இருப்பதால், 1856-57க்கு முந்தைய கட்டுமானத்திற்குள் இருந்த சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாட்டைத் தொடர்வதைத் தடுக்க முடியாது. சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை, இஸ்லாமிய மசூதி என்ற கட்டுமானத்தால் அசைத்துவிட முடியாது'' என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இவ்வளவு ஆண்டுகளாக இந்த விஷயம் எப்படி உயிர்ப்புடன் வைக்கப்பட்டு வந்தது என்பதை இப்போது நாம் பார்ப்போம். ராம்ஜன்ம பூமி குறித்த முதலாவது சர்ச்சை 1853-55 காலக்கட்டத்தில் ஏற்பட்டதாகப் பதிவுகள் இருக்கின்றன. மசூதியை ஆக்கிரமித்துக் கொண்ட மஹந்த்கள் மற்றும் அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட முஸ்லிம்களுக்கு இடையில் பெரிய அளவில் ஆயுத மோதல் நடந்ததைத் தொடர்ந்து, அந்த இடத்தில் இரண்டு சமுதாயத்தினரும் வழிபாடுகளைத் தொடர்வது என்று மூத்தவர்கள் சேர்ந்து முடிவு செய்தனர். கட்டடம் மசூதியாக பயன்படுத்தப்பட்டது. மசூதிக்கு வெளியே இந்துக்கள் வழிபாடு நடத்தினர்.
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
courtesy: ஜெ.வெங்கடேசன்

Saturday, November 9, 2019

அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - Ayodhya_Babar masjid final verdict


நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு:


https://drive.google.com/file/d/1UlIAJbCzyNIQXR41lzxkXg3Q40eZHXku/view?usp=sharing