Search This Blog

Saturday, August 9, 2014

ஆண், பெண், அலியாவது ஏன்?

"பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே"
(திருமந்திரம் 480)
ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என மூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.
குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
(திருமந்திரம் 482)
அது சரி, ஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில் பிறப்பதேன்? அதற்கும் திருமூலர் பதில் கூறுகிறார். விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.
கருத்தரித்து விட்டது, நமக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் தம்பதியினருக்கு அதிர்ச்சி தரும் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்? உடல் உறவின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே
மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம் என்கிறார் திருமூலர். மேலும் உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் சிறுநீர் அதிகமிருந்தால் கருத்தரிக்கும் குழந்தை ஊமையாக இருக்கும் என்கிறார். பெண்ணின் வயிற்றில் மலமும் சலமும் சேர்ந்து மிகுந்திருந்தால்குழந்தை குருடனாகவே பிறக்கும் என்றும் கூறுகிறார் மூலர். எப்படி?
"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே
(திருமந்திரம் 481)
சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். ஆனால் ஆணின் சுவாசத்தின் நீளம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் தரிக்கும் குழந்தை முடமாகும் என்று கூறுகிறார். வெளிப்படும் சுவாசத்தின் நீளமும் திடமும்ஒருசேரக் குறைவாக இருந்தால் குழந்தை கூனாகப் பிறக்கும்.

வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?

1. தேங்காய் எண்ணெய் - 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்!)
2. வெள்ளைக் கரிசாலைச் சாறு - 0.5 லிட்டர்
3. கீழாநெல்லிச் சாறு - 0.5 லிட்டர்
4. அவுரி சாறு - 0.5 லிட்டர்
5. கறிவேப்பிலைச் சாறு - 0.5 லிட்டர்
6. பொடுதலைச் சாறு - 0.5 லிட்டர்
7. நெல்லிக்காய்ச் சாறு - 0.25 லிட்டர்
8. சோற்றுக் கற்றாழைச் சாறு - 0.25 லிட்டர்
(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.)
இலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.
இந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும்.
இது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் தேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்

சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.
1. தலை 307
2. வாய் 18
3. மூக்கு 27
4. காது 56
5. கண் 96
6. பிடரி 10
7. கன்னம் 32
8. கண்டம் 6
9. உந்தி 108
10. கைகடம் 130
11. குதம் 101
12. தொடை 91
13. முழங்கால் கெண்டை 47
14. இடை 105
15. இதயம் 106
16. முதுகு 52
17. உள்ளங்கால் 31
18. புறங்கால் 25
19. உடல்உறுப்பு எங்கும் 3100
ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.
உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.
கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்
குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.
கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்
குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.
குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.
கிருமிகள் உருவாகக் காரணம்
கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.
அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.
நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.
கண் நோய் :
கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.
பொதுக் காரணங்கள் :
வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.
சிறப்புக் காரணம் :
சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.
காசநோய் :
கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.
வெள்ளெழுத்து
கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.
முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.
கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.
தலைநோய் :
உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை
ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.
கபால நோயின் வகை :
வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.
தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.
அம்மை நோய் :
அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.
மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.
அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.
இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.
அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.
சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,
1. பனை முகரி 2. பாலம்மை
3. மிளகம்மை 4. வரகுதரியம்மை
5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை
7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை
9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை
11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை
13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை
என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

Wednesday, August 6, 2014

அல்சரை அழிக்க...

தினமும் திட்டமிட்டு டென்ஷன் இன்றி வேலைகளை செய்து முடிக்கவும். டென்ஷனை தவிர்த்து ரிலாக்சாக இருக்க பழகலாம். சாப்பாட்டில் காரம் குறைக்கவும். அசைவ உணவுகளை வாரத்தில் ஒருநாள் என்பது போல் தள்ளிப் போடவும். அப்படியே சாப்பிட நேர்ந்தாலும் மசாலா பொருட்களைக் குறைத்துக் கொள்ள லாம். பெயின் கில்லர் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி தொடர்ந்து உபயோகிப்பதைத் தவிர்க்கவும். காபின் கலந்த உணவுகள் மற்றும் பானங்களுக்கு தடா போடவும். 

புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்தி விடலாம். வயிற்றை நீண்ட நேரம் காலியாக வைக்காமல் அவ்வப்போது குறை ந்த அளவு உணவாக எடுத்துக் கொள்ளலாம். முன் எச்சரிக்கையாக இருந்தால் அல்சர் உருவாவதை தடுக்கலாம். அப்படியே வந்தாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் ஹோமியோ மருத்துவர் சசிகுமார். 
மூலிகைகளைப் போல செயல்பட்டு வயிற்றுப் புண்ணை ஆற்றும் வித்தை கீரைகளுக்கும் உண்டு. மணத்தக்காளி, வெந்தயக் கீரை அல்லது அகத்தி இதில் ஏதாவது ஒரு கீரையை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் கீரை சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம். சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். 
இதே கீரை வகைகளில் ஒன்றைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம்பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக் குடிக்கலாம். பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால்  குடல் புண் குணமாவதை உணர முடியும். 
மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரை த்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ள வும். இத்துடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
பாட்டி வைத்தியம்
அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும். 
அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும். 
அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். 
நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது. 
ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்தால் குடல் புண்கள் குணமாகும். 
உளுந்தை மாவாக்கி அத்துடன் மிளகு, சீரகம், கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் குடல் புண்கள் ஆறும். 
ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் - தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். 
கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும். 
சாணாக்கிக் கீரையை துவரம் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் வயிற்று புண்கள் குணமாகும். 
சோற்று கற்றாழை சாறில் பச்சை பயறை ஊற வைத்து, காயவைத்து பிறகு கஞ்சி காய்ச்சிக் குடித்தால் வயிற்று வலி, குடல் புண், குடல் நோய்கள் அனைத்தும் தீரும்.
வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.


செய்யக்கூடாதவை
* புகைபிடிக்கக் கூடாது.
* மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது
* வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.
* அதிகமாகச் சாப்பிடக்கூடாது.
* பட்டினி கிடக்ககூடாது.
* காரம், எண்ணையில் பொரித்த உணவுகள் உண்பதை குறைக்க வேண்டும்
* பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
* சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.
* சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
* இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.
* மனநிலையை தடுமாற விடக் கூடாது.
* அவசரப்படக் கூடாது.
* கவலைப்படக் கூடாது.
* மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
* சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் படுக்ககூடாது
செய்ய வேண்டியவை
* குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்
* அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும்.
* தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
* மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
* இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும்.
* இறுக்கமாக உடை அணியக் கூடாது.
* மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்திக் கொள்ளலாம்.
* யோகாசனம், தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.
* மன இறுக்கத்தை விடுத்து மனமகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்.
* அலுவலக வேலைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும்.
* சுகாதாரத்தை பேண வேண்டும்.
சாப்பிட வேண்டியவை
* பொரித்த அல்லது தாளித்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. எனினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம்.
* சத்தான சரிவிகித உணவு.
* குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.
* காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
* டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும். 
* மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.
* பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.
* பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.
* பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.