Search This Blog

Sunday, April 14, 2013

சோயா பீன்ஸ்

உடல் ஆரோக்கியங்களை நமக்கு வழங்கும் சக்தி கொண்ட உணவுப்பொருள் என்பது முக்கியமானது. நம்பமுடியாத நல்ல விஷயங்களை நமக்குக் கொடுக்கிறதா சோயா பீன்ஸ் (Soybeans)?

என்ன இருக்கிறது?

சோயாவில் அனைத்து வைட்டமின் "பி" வகைகளும் இருக்கின்றன. குறிப்பாக தயாமின் (Thiamin Thiamin), நியாசின் (Niacin), போலிக் ஆசிட், ரைபோபிளேவின் (Riboflavin) போன்றவை அதிகமாக இருக்கின்றன. இவை இருதயம், கல்லீரல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தானிய வகைகளிலேயே சோயாவில்தான் அதிக புரோட்டின் இருக்கிறது. 100 கிராம் சோயாவில் 43 கிராம் புரோட்டின் கிடைக்கிறது. இந்த புரோட்டினில் நம் உடலுக்குத் தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்கின்றன. (இந்த அமினோ அமிலங்களை நம் உடல் தானாகவே உருவாக்கிக்கொள்ள முடியாது). மாமிச புரோட்டினுக்கு இணையாக வரக்கூடிய ஒரே ஒரு சைவ புரோட்டின் சோயா பீன்ஸ்தான்.

சோயாவில் கொழுப்பு குறைவாகவே இருக்கிறது. 100 கிராமில் 20 கிராம் கொழுப்புதான் இருக்கிறது.

சோயாவில் கார்போஹைட்ரேட் (Carbohydrate) அளவும் குறைவுதான். 100 கிராமில் 30 கிராம்தான்.

சோயாவில் நல்ல நார்ச்சத்து இருப்பதால் தளர்ந்த சோர்வடைந்த இருதயத்திற்கு சோயாவின் பாதுகாப்பு அபரிமிதமானது.

சோயா ஒரு இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட். இதில் லெசித்தினும், வைட்டமின் "ஈ" யும் சேர்ந்து இருக்கிறது.

மினரல்கள் சோயாவில் நிறைய இருக்கின்றன.மக்னீஷியம் (magnesium) 280 மி.கி.,கால்சியம் (calcium) 277 மி.கி., பாஸ்பரஸ் 704 மி.கி. இருக்கிறது. இதனால் சோயா சுலபமாக எலும்புகளுக்கும், பற்களுக்கும் பாதுகாப்பு வழங்கும். தவிர, சோயாவில் இருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

சோயா மூலம் கிடைக்கும் நேரடியான பலன்கள் என்ன?

1. உறுதியான எலும்புகள் உங்களுக்கு நிச்சயம் தொடர்ந்து நீங்கள் சோயா பால் குடிப்பதால். சோயாவில் கால்சியம் குறைவாக இருந்தாலும், சோயாவில் இருக்கிற தாவர ஹார்மோன் எலும்புகளின் தேய்மானத்தையும், உதிர்வையும் தடுக்கும் சக்தி கொண்டது.

2.மெனோபாஸ் (Menopause) பிரச்னைகளைத் தடுக்கும் ஆற்றல் சோயாவுக்கு உண்டு. இதில் இருக்கிற ஐசோ பிளேவினாஸ் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல செயல்படும் சக்தி கொண்டது. இது அற்புதமாக மெனோபாஸ் நிலையின்போது ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கும் சக்தி கொண்டது.

2. இருதயத்தின் சக்தியைக் கூட்டுவதில் சோயா அபாரமாகச் செயல்படும். இரத்தக் குழாய்களின் இளகுத் தன்மையை அதிகரித்து, கொலஸ்டிரால் அளவைக் குறைத்து, இரத்தக் குழாய்களுக்குள் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

4. சோயா சில வகை புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. தினசரி 25கி. நீங்கள் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் போதும். ரிஸ்க் இருக்கிறது என்றால், 50 கி. எடுத்துக்கொள்ளுங்கள். இது ப்ராஸ்டேட் கான்ஸர் உருவாக்குகிற என்ஸைமைத் தடுக்கும் சக்தி கொண்டது. பெண்களுக்கு கர்ப்பப்பை கான்ஸர் வராமல் தடுக்கும்.

5. சோயாவின் உணவுப்பொருள் தகுதி மற்றவற்றைவிட அதிகம். இயற்கையாகவே இருக்கிற ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின் "ஈ" லெசித்தின் போன்றவை கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இருதயப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றன.

சோயாவில் ஐசோபிளேவோன்கள் இருக்கிறது என்கிறீர்களே? அப்படி என்றால் என்ன?

இவற்றை தாவர ஹார்மோன்கள் என்று சொல்கிறார்கள். இவை நம் உடல் ஹார்மோன் போலவே செயல்படும் திறன் கொண்டவை. சோயாவில் இருக்கும் இந்த ஐசோபிளேவோன்கள் பெண்களின் முக்கிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல செயல்படும் சக்தி கொண்டது. பருவ வயதில் அதிக சோயாவை எடுத்துக்கொள்வதால் பிற்காலத்தில் வரும் மார்புப் புற்றுநோய்கள் தடுக்கப்படும் என்று உறுதி சொல்லப்படுகிறது.

சோயா புரோட்டின் கடைகளில் கிடைக்கிறது. வாங்கும்போது இதில் கவனிக்க வேண்டியது என்ன?

கடைகளில் சோயா புரோட்டின் இரண்டு விதங்களில் கிடைக்கும்.

1. சோயா புரோட்டின் கான்ஸ்ஸென்ட்ரேட்: இதில் 70 சதவிகித புரோட்டின் இருக்கும். இது சுலபத்தில் கரையாது. நிறைய முயற்சி செய்து கரைக்க வேண்டி இருக்கும். சுலபத்தில் ஜீரணமாகக் கூடியது. குழந்தைகளுக்கு, கர்ப்பிணிகளுக்கு, பால் கொடுக்கும் பெண்களுக்கு, வயதானவர்களுக்கு இந்த வகை நிறைய உதவும். இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. முதலில் சுவை சிலருக்குப் பிடிக்காத மாதிரி இருக்கும். இரண்டாவது சிலருக்கு காற்று வெளியேறிக்கொண்டே இருக்கும். மூன்றாவது இதில் ஐசோபிளேவினேன்கள் அளவு குறைவாக இருக்கும். இதனால் மெனோபாஸ் பிரச்னைக்காக சாப்பிடும் பெண்களுக்கு இந்த சோயா புரோட்டின் கான்ஸ்ஸென்ட்ரேட் உதவாது.

2. சோயா புரோட்டின் ஐசோலேட்: இதில் புரோட்டின் அளவு 90 சதவிகிதம் இருக்கிறது. கூடவே அத்தனை அடிப்படை அமினோ அமிலங்களும் உள்ளன.

சோயாவில் எந்தக் கெடுதலும் இல்லையா?

இருக்கிறது. வயிற்றில் ஜீரணத்திற்கு உதவும் டிரிப்சின் என்கிற என்ஸைமின் வேலையைத் தடுப்பதில் சோயா ஈடுபடுகிறது. ஆக இதைத் தடுக்க சோயாவை நல்ல சூட்டில் வேக வைக்கவேண்டும். தவிர உடலில் இரும்புச்சத்து கிரகிப்பை சோயா தடுக்கிறது. இதனால் இரத்த சோகை உருவாகலாம். இதைத் தடுக்க வைட்டமின் "சி" நிறைந்த பழங்களைச் சாப்பிடுங்கள்.

சோயாவை எப்படி எடுத்துக்கொள்ளலாம்?

சோயா பல விதங்களில் கிடைக்கிறது. உங்கள் விருப்பத்திற்குப் பயன்படுத்தலாம். சிலவற்றை கீழே கவனியுங்கள்.

1. சோயாபீன்: இது மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களில் பெரிய மணிகளின் அளவில் கிடைக்கும். உலர்ந்த சோயா பீன்களை காற்றில் புகாத டப்பாக்களில் வையுங்கள். இரண்டு கப் சோயா பீன்களைத் தயாரிக்க, ஆறு கப் தண்ணீரில் இரவு முழுக்க ஊற வையுங்கள். பின் காலையில் வடித்து, கழுவி, ப்ரஷர் குக்கரில் மறுபடியும் 6 கப் தண்ணீர் ஊற்றி 40 நிமிடத்திற்கு குறைந்த சூட்டில் வேக வையுங்கள். இதற்குப் பின்பே உப்பு தேவை என்றால் சேர்க்கவும். முன்பே சேர்த்தால் சோயாபீன்கள் மென்மையாவதை உப்பு தடுக்கும்.

2. சோயா பால்: தினசரி பாலைத் தவிர்த்துவிட்டு 200 மி.லி. சோயா பாலுக்கு மாறிவிடலாம். நீங்களே தயாரிப்பதில் அந்த வாசனை உங்களை குடிக்கவிடாமல் தடுக்கும். கடைகளில் கிடைக்கிற சோயா பால் நல்ல சாய்ஸ்.

3. டெக்ஸ்டர்ட் சோயா: இதுவும் கடைகளில் கிடைக்கும். பார்ப்பதற்கு மாமிசத் துண்டுகள் போலவே இருக்கும். உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வழக்கமான கறிகளுக்குப் பதில் இந்த வகை சோயாவை பயன்படுத்தலாம். இதில் 70 சதவிகித புரோட்டின் இருக்கிறது. மிகக் குறைந்த கொழுப்பு, நிறைய நார்ச்சத்து மற்றும் ஐசோபிளேவினோன்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால் இதில் கொஞ்சம் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு பிழிந்து ஈரப்படுத்திக்கொள்ளலாம்.

4. டோபு: பார்ப்பதற்கு வெண்ணெய் மாதிரி இருக்கும். இது சோயாவை, ஜிப்ஸம் என்கிற கால்சியம் கோயாகுலன்ட் சேர்த்து கர்டிலிங் செய்து தயாரிக்கப்படுகிறது. புரோட்டின், வைட்டமின் "பி" நிறைந்தது. அரை கப்பில் 10.1 கி. புரோட்டின் இருக்கும். இது சாதாரண பாலில் 5.1 தான் இருக்கும். சோயா பால் மாதிரி இல்லாமல் இதில் கால்சியம் சேர்ந்து இருக்கும்.

குளிர்பதனப் பெட்டியில் ஒரு பௌல் தண்ணீரில் போட்டு வைத்துவிடலாம். ஒரு வாரம் கெடாமல் இருக்கும்.

5. சோயா எண்ணெய்: மற்ற எண்ணெய்களைப் போல இல்லாமல் சோயா எண்ணெயில் எந்த ஒரு சிறு கெடுதலும் இல்லை. இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்து இருப்பது இரத்தக்குழாய்களுக்கும், இருதயத்திற்கும் நன்மை செய்யும்.

6. சோயா சாஸ்: சோயாவை ஃபெர்மென்ட் செய்து உருவாக்கப்படும் இந்த சாஸ் பழுப்பு நிறத்தில் இருக்கும். மற்ற சாஸ் போலவே இதைப் பயன்படுத்தலாம். இதன் ஒரு குறை, இதில் ஐசோபிளேவினோன்கள் குறைவான அளவிலேயே இருக்கும். 100 கிராம் சாஸில் 1.6 மி.கிதான் இருக்கும். கூடவே உப்பு அதிகம் கலந்திருக்கும். கவனம் தேவை.

சோயா வகை - ஐசோபிளேவினோன்

உணவு அளவு - (100 கிராமுக்கு)

1. சோயா பீன் - 200 மி.கி.

2. சோயா பால் - 35 மி.கி.

3. டெக்ஸ்டர்ட் - சோயா 92.7 மி.கி.

4. சோயா சாஸ் - 1.6 மி.கி.

No comments:

Post a Comment