Search This Blog

Tuesday, May 28, 2013

ஒதுக்கப்பட்ட தொல்காப்பியம்

மனிதர்கள் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து பேசக் கற்றுக்கொண்டு விட்டார்கள் என்று மனித சரித்திரத்தை ஆராய்ந்தவர்கள் சொல்கிறார்கள்.

பேச்சு என்பது ஒலி. அதாவது சப்தம். வாய் மொழியாக எழுப்பும் சப்தத்தையே "பேச்சு' என்றும் "சொல்' என்றும் குறிப்பிடுகிறார்கள். அது சீராக ஒழுங்குபடுத்தப்பட்டது.

"எல்லாச் சொல்லும் பொருள் உடையது' என்று தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பொருள் இல்லாதது சொல் கிடையாது. சொற்கள் ஒவ்வொன்றாகச் சேர்த்து மொழியாக்கினார்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு எண்ணங்களையும் கருத்துகளையும் சித்திரங்களாக வரைந்து வந்தார்கள். சித்திரங்களில் இருந்து மொழியை எழுதும் எழுத்துகளை உருவாக்கிக் கொண்டார்கள்.

உலகத்தில் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். எல்லா மொழிகளும் ஒரே மொழியில் இருந்து பிரிந்தது என்றும், மனிதர்கள் புலம்பெயர்ந்ததால் வாழுமிடம், வாழ்க்கை முறை, பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மொழிகள் தனியாக உருவாகியது என்பது மொழிகள் பற்றி ஆராய்ந்தவர்களின் கூற்றாக இருக்கிறது.

ரோமன், கிரேக்கம், பாரசீகம், ஹீப்ரு, சமஸ்கிருதம், தமிழ், சீனம் ஆகியவை உலகத்தின் பழைய மொழிகள். ஒவ்வொரு மொழியும் தனியாக இலக்கண நூல்களையும், இலக்கிய நூல்களையும் கொண்டுள்ளது.

தமிழ்மொழியின் இலக்கண நூல் தொல்காப்பியம். அது கி.மு. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பது சிலரின் கருத்து. இன்னும் சிலர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு நூல் என்றும் மற்றும் சிலர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு நூல் என்றும் கூறுகிறார்கள்.

தொல்காப்பியம் எழுதியவர் தொல்காப்பியர். அவர் சேரநாட்டில் பிறந்து வளர்ந்தவர். அகத்தியரின் மாணவர்களில் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தொல்காப்பியர் பற்றி உண்மையான வரலாறு எழுதப்படாமல் இருக்கிறது என்பதுதான் உண்மையாகும். தொல்காப்பியத்திற்கு முன்னால் தமிழில் பல இலக்கண நூல்களும், இலக்கிய நூல்களும் இருந்தன என்பதற்கு தொல்காப்பியமே சான்றாக இருக்கிறது.

எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் - என்று மூன்று அதிகாரங்கள் கொண்டது தொல்காப்பியம். ஒவ்வோர் அதிகாரத்துக்கும் ஒன்பது இயல்கள். ஆக இருபத்தேழு இயல்கள் கொண்டது. பாடல்களாகவே கருத்துகள் சொல்லப்பட்டு இருக்கிறது. அதை சூத்திரம் அல்லது நூற்பா என்று குறிப்பிடுகிறார்கள். தொல்காப்பியம் 1,610 நூற்பாக்கள் கொண்டது என்று சிலரும், 614 நூற்பாக்கள் கொண்டது என்று சிலரும் பிரித்திருக்கிறார்கள். இந்தப் பிரிவு தொல்காப்பியர் செய்ததில்லை. தொல்காப்பியத்தின் உரையாசிரியர்கள் செய்தது.

தமிழ் நூற்கள் பெரும்பாலும் கடவுள் வாழ்த்தோடு தொடங்குவது வழக்கம். ஆனால், தொல்காப்பியம் கடவுள் வாழ்த்தோடு தொடங்கவில்லை. அதற்குப் பின்னால் யாரும் கடவுள் வாழ்த்துப்பாடி சேர்க்கவில்லை.

தமிழின் பண்டைய நூல்களில் தொல்காப்பியம் கடவுள் வாழ்த்து இல்லாமலேயே இருக்கிறது. ஆயினும் தொல்காப்பியம் கடவுள் வாழ்த்துப்பற்றிக் குறிப்பிடுகிறது. "கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே' என்பது தொல்காப்பிய நூற்பா.

தொல்காப்பியத்திற்குப் பாயிரம் ஒன்று இருக்கிறது. அதில்தான் தமிழகத்தின் எல்லை "வடவேங்கடம் தென் குமரி ஆஇடைத் தமிழ் கூறும் நல்லுலகம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. "பாயிரம்' என்னும் முன்னுரை எழுதியவர் தொல்காப்பியருடன் கல்வி பயின்ற பனம்பாரனார்.

தொல்காப்பியத்தின் முதல் அதிகாரம் எழுத்ததிகாரம். அது தமிழ் முதல் எழுத்துகள் என்ன என்று சொல்கிறது. அதாவது "எழுத்து எனப்படுவது அகரம் முதல் னகரம் இறுவாய் முப்பது என்ப' என்கிறது.

தமிழ் எழுத்துகள்பற்றிச் சொல்லும் தொல்காப்பியம் எழுத்தின் வடிவம்பற்றி சொல்வது இல்லை. அதுபோலவே தமிழ் மொழி எழுத்துக்கு என்ன பெயர் என்பதையும் குறிப்பிடவே இல்லை. மெய்யெழுத்துகள் புள்ளிபெறும் என்கிறது. ஆனால், புள்ளி எங்கே இருக்கும் என்று சொல்லவில்லை.

எழுத்ததிகாரம் எழுத்துகள் பிறப்பதைச் சொல்கிறது. ஒலிதான் சொல்லாகி எழுதப்படுகிறது. ஒலியைத் தமிழில் அரவம், இசை, ஓசை என்கிறார்கள். அது ஒலியை நன்கு அறிந்ததன் விளைவாகும். சீன மொழியைத் தவிர, மற்றெல்லா மொழிகளும் ஒலி எழுத்துகளால்தான் எழுதப்படுகின்றன.

முதன்முதலாக ஒலி எழுத்துகள் முறை என்பது எங்கிருந்து - எந்த மொழியில் இருந்து தொடங்கியது என்பது தெரியவில்லை. ஆனால், தமிழ் எழுத்துகள் ஒலி எழுத்துகள் முறையிலேயே எழுதப்படுகிறது.

சொல்லதிகாரம், தொல்காப்பியத்தின் இரண்டாவது அதிகாரம் அது 463 நூற்பாக்கள் கொண்டது. எழுத்துகள் சொல்லுக்கு முதல் ஆதாரம் கிடையாது. சொல்லப்படுவது சொல். சொல், பின்னால் எழுத்தால் எழுதப்படுகிறது.

ஒரு மொழிக்கு முதலில் சொல்தான் வந்தது. எழுத்து, ஒரு மொழிக்குப் பின்னால்தான் வந்தது. ஐரோப்பாவில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மொழியை எழுத எழுத்துகளைக் கண்டுபிடித்தார்கள் என்கிறார்கள்.

சொல்லதிகாரத்தில் தமிழ் மொழியை எவ்வாறு பேசுவது, எவ்வாறு எழுதுவது, பேசவும் எழுதவும் எவ்வாறு சொற்களை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் சொல்கிறது. "எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி' என்று விளக்கம் தருகிறது பாயிரம்.

தொல்காப்பியத்தின் இறுதியதிகாரம் பொருளதிகாரம். பொருள் என்றால் தொல்காப்பியத்திற்கு வாழ்க்கை. மனிதர்கள் தங்கள் அறிவாலும் ஆற்றலாலும் கண்டறிந்த எழுத்தையும் சொல்லையும் கொண்டு புனையப்படும் வாழ்க்கைக்கு - இலக்கியத்திற்கு இலக்கணம் கூறுகிறது பொருளதிகாரம். அது அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்களைக் கொண்டது.

தமிழ் இலக்கியம் என்பது திணை கோட்பாட்டைச் சார்ந்தது. அது ஏழு திணைகள் என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஏழு திணைகளில் ஐந்து அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவை நிலங்கள் கொண்டவை. அதில் நிலம் இல்லாத பாலையும் சேர்ந்துவிடுகிறது. அதுவே அகத்திணை. அகத்திணை முதல், கரு, உரிப்பொருள்களால் இலக்கியமாகச் சொல்லப்படுகிறது. அகத்திணைப் பாடல்களில் தலைவன், தலைவி, தோழி நற்றாய், செவிலித்தாய் பெயர் குறிப்பிடப்படுவது இல்லை. மேலும் நடந்தது கூற்றுகளாகவே சொல்லப்படுகின்றன. "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்' என்பது தொல்காப்பியக் கூற்று. வாழ்க்கை என்பது புனைவு வகையாலும், உலகியல் வழக்காலும் பாடல் சான்ற மரபு வழியாகச் சொல்லப்படும் என்கிறது.

தொல்காப்பியம், பொருளதிகாரம் 667 நூற்பாக்கள் கொண்டது. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தொல்காப்பியத்திற்குள் இடைச்செருகல் - அதாவது புலவர்கள் எழுதிச் சேர்த்த சில பகுதிகள் இருக்கின்றன என்றும் மொழியையும் சொல்லப்படும் முறையையும் வைத்துக்கொண்டு சொல்கிறார்கள். தொல்காப்பியம் தமிழகத்தில் எந்தக் கல்வெட்டிலும் பொறிக்கப்படவில்லை. எனவே காலம்தோறும் பனைவோலையில் எழுதிப் படித்து வந்தார்கள். ஆனால், எழுத்து மாறுதல் ஏற்பட்டதுபோல இடைச்செருகல்கள் ஏற்பட்டுவிட்டன.

தமிழில் தொல்காப்பியத்திற்குப் பிறகு சிறந்த இலக்கண நூல் எழுதப்படவில்லை. இலக்கணம் புதிதாக எழுத எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. பத்தாம் நூற்றாண்டில், அதாவது தொல்காப்பியம் எழுதப்பட்ட ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கு உரை எழுத ஆரம்பித்தார்கள். தங்கள் காலத்து இலக்கண, இலக்கிய அறிவின் அடிப்படையில் மொழிப் புலமையின் வழியாக உரையெழுதினார்கள்.

இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், கல்லாடர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் உரைகள் சிறப்பான உரைகள் என்று ஏற்கப்பட்டிருக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டில் பவநந்தி புலவர், "நன்னூல்' என்ற இலக்கண நூல் எழுதினார்.

எளிய முறையில் தமிழ் பேசவும், எழுதவும் நன்னூல் ஆதாரமாக அமைகிறது. எனவே தமிழ் படிக்க ஆரம்பித்தவர்கள் அதையே இலக்கண நூலாக வைத்துக் கொண்டார்கள். தொல்காப்பியப் படிப்பு குறைந்தது. ஆனால், பதினெட்டாவது நூற்றாண்டில் கிறிஸ்துவ ஊழியம் செய்ய தமிழகம் வந்து தரங்கம்பாடியில் பணியாற்றிய பார்த்தோலோமியோ சிகன்பாகு, தான் படித்த தமிழ் நூல்களில் முதல் நூலாக தொல்காப்பியத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

1847-ம் ஆண்டில் முதன்முதலாக தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையுடன் அச்சிடப்பட்டது. பின்னர் தமிழறிஞர்கள் தொல்காப்பியத்தின் மூலம் - உரைகள் ஆகியவற்றை அச்சிட்டார்கள்.

தொல்காப்பியம் மனித அறிவால் பல்லாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. ஆனால், அது குழப்பமான நூல் கிடையாது. அதன் மொழி எளிமையானது. படிப்பது என்பதில் சிக்கலற்றது. ஆனால், பழைய நூல் என்பதால் பல சொற்களுக்கு அர்த்தமும், சொல்லப்பட்ட முறையால் என்ன சொல்கிறது என்பதை அறிந்துகொள்வதில் இடர்பாடும் ஏற்படுகிறது. தமிழின் முதல் நூல் என்றும், அறிவின் உச்சமான படைப்பென்றும் ஏற்கப்பட்டுள்ள தொல்காப்பியம் கற்க வேண்டிய நூல் இல்லையென்றும் - அதனைக் கற்பதால் நவீன காலத்துக்குப் பயன் ஏதுமில்லை என்றும் கருதிய கல்வியாளர்கள், பேராசிரியர்கள் தமிழ் முதுகலை படிக்கும் மாணவ - மாணவிகள் மட்டும் படித்தால் போதுமென அரண் எழுப்பிவிட்டார்கள்.

சென்னைப் பல்கலைக்கழகம், தொல்காப்பிய "மூலம்' படிக்க வேண்டியதில்லை என்று ஒதுக்கித் தள்ளிவிட்டது. தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் இருந்து தொடங்கி 12-ம் வகுப்பு வரையில் தொல்காப்பியர், தொல்காப்பியம் பற்றி தமிழ், சமூகவியல் பாட புத்தகங்களில் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், கல்லூரிகளுக்கு அறிவியல், வணிகவியல், சரித்திரம், பூகோளம் கற்கச் செல்கிறவர்களுக்கும், மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்நுட்பப் படிப்புக்குச் செல்வோர்க்கும் அது பயன் உள்ளதாக இருக்கும்.

தமிழ் மட்டுமே படிப்பவர்களுக்கு - அதுவும் முதுகலைப் பட்டதாரி இளைஞர்கள்தான் தொல்காப்பியம் படிக்க உகந்தது என்று பாடத்திட்டம் வகுப்பது, வரலாறு, மொழி, இலக்கணம் - ஆகியவற்றுக்கு முரணானது

No comments:

Post a Comment