Search This Blog

Thursday, February 27, 2014

சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள் - நினைவு நாளில் சிறப்பு பகிர்வு!

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்...

* ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.

* முதல் சிறுகதை 1958-ல் 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. 'கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்' என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை 'இடது ஓரத்தில்' 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!

* முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

* 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

* ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகை களில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!

* தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வ ளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!

* சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!

* கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!

* ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

* கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை!

* சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கி ஜோக் அது!

No comments:

Post a Comment