நினைவாற்றலின் ரகசியம்!
நம்மில் பலருக்கு ஞாபகமறதி என்பது பெரும் பிரச்னை. வாங்கிய கடனை மறக்கும்போது நமக்கு உதவும் ஞாபக மறதி, கொடுத்த கடனை மறக்கும்போது நம்மைப் பழிதீர்த்துக் கொள்கிறது. மனிதனின் ஞாபகசக்தியின் மூலத்தை அறிய உலகெங்கிலும் பல விஞ்ஞானிகள் முயன்று வந்தார்கள். இதில் வெற்றி பெற்றவர், கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி கேரிலின்ச்.
மூளையிலுள்ள கால்பெய்ன் என்ற நொதியே நீண்ட கால நினைவாற்றலுக்குக் காரணமாக இருக்கிறது என்று கேரி கண்டறிந்தார். நாம் ஒரு பொருளைப் பார்க்கும்போதோ, ஒரு விஷயத்தைக் கேட்கும்போதோ ஏற்படுகின்ற உணர்ச்சிகளை மூளை பெற்றவுடன், அங்குள்ள புரதப் பொருட்கள் சிதைவடைகின்றன.
இதனால் உண்டாகும் வேதிவினை, புதுப்புது தொடர்புகளை ஏற்படுத்துகிறது. இதற்கு மூல காரணமாக அமைவது கால்பெய்ன் ஆகும். ‘‘ஒருவரின் பெயரையோ அல்லது பாடப் பகுதியையோ தொடர்ந்து சில நாட்களுக்குச் சொல்லிக் கொண்டே வந்தால் 20 ஆண்டுகள் கழித்தும் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய ஆற்றலை கால்பெய்ன் அளித்து விடுகிறது’’ .
எலியின் மூளையிலுள்ள கால்பெய்னை ஊக்குவிக்கும்போது அதன் நினைவாற்றலில் மாறுபாடு ஏற்படுவதை கேரிலின்ச் கண்டு பிடித்தார். ‘மின் தூண்டல் முறையில் கால்பெய்ன் நொதியை ஊக்குவிப்பதன் மூலம், மனிதனுடைய நினைவாற்றலையும் மாற்றியமைக்கலாம்’ என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வருங்கால மாணவ மாணவிகளுக்கு ஒரு பத்து மார்க் கேள்வி மனதில் பதியவில்லை என்றால், மருத்துவரிடம் ஒரு சிட்டிங் போய் வரலாம்!
No comments:
Post a Comment