Search This Blog

Wednesday, April 10, 2013

இந்திய அரசியலின் அரிதான தலைவர்-மொரார்ஜி தேசாய்

வரலாற்றில் சில நாயகர்கள் அவ்வளவாக நினைவுகூரப்படுவது இல்லை. அத்தகு தலைவர் மொரார்ஜி தேசாய். 







‘எந்த சொத்தையும் என் அப்பா எனக்கு சேர்த்து வைக்கவில்லை; நேரான வாழ்க்கையையும், அறம் சார்ந்த செயல்பாட்டையும் மட்டுமே எனக்குள் விதைத்து விட்டு போயிருக்கிறார்’ என்கிற அளவுக்கு எளிமையான குடும்பத்தில் குஜாரத்தில் பிறந்தார்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் தேறி ஆங்கிலேய அரசில் பணியாற்றிக் கொண்டிருந்தவர், காந்தியடிகளின் அழைப்பை ஏற்று உப்பு சத்யாகிரகத்தில் பங்குகொள்ள, தன் பதவியை துறந்து வந்தார்.

எண்ணற்ற விடுதலை போராட்டங்களில் பங்குகொண்ட மனிதர், மும்பை மாகாணத்தின் முதல்வராக உயர்ந்தார். பின், நிதி அமைச்சராக, துணைப் பிரதமராக காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த இவர், இந்திரா கட்சியை உடைத்ததும் ஸ்தாபன காங்கிரசில் இணைந்தார். பின்னர் எமெர்ஜென்சியால் நாடு ஜனநாயகம் இழந்த பொழுது ஜெ.பி.யின் பின் அணிவகுத்து ஜனதா கட்சியில் அங்கம் வகித்தார்.

தேர்தலில் வென்றதும் முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் என பெருமை பெற்றார். எல்லா உணவகங்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு நல்ல சாப்பாடு ஒவ்வொரு நாளைக்கும் போட வேண்டும் என அவர் கொண்டு வந்த திட்டமே ஜனதா சாப்பாடு என புகழ் பெற்றது. அதை பின்பற்றினால் மட்டுமே உணவகங்களுக்கு அனுமதி தரப்பட்டது.

எம்.ஆர்.பி.யை பொருட்களின் மீதும் குறிக்கும் முறையும் இவர் காலத்தில் வந்ததே. இவரின் வாழ்க்கை நேர்மையால் மின்னிய தன்மை கொண்டது. பம்பாய் மாகாண அமைச்சராக இருக்கும்பொழுது மருத்துவ கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த முதல் தர மாணவியான இவர் மகள் ஒரு தாளில் தவறவே தேசாயிடம் மறு திருத்தலுக்கு விண்ணப்பிக்கிறேன் என கேட்க, இவர் ‘‘நான் இந்த மாகாண அமைச்சர். நீ நேரிய வழியில் தேறினாலும் நான் தான் அவ்வாறு செய்யுமாறு செய்தேன் என ஊர் ஏசும். வேண்டாம்’’ என்று சொல்ல, மகள் தற்கொலை செய்து கொண்டார்.

அதைவிட நம்பவே முடியாத ஒரு நிகழ்வும் நடந்தது. அரசின் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இவர், வாடகை கட்ட முடியாமல் அடுக்கு மாடி குடியிருப்பை விட்டு வெளியேற்றபட்டார். எந்த அதிகார துஷ்பிரயோகமும் செய்யாமல் வெளியேறினார். மருமகள் அந்த அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்திரா காந்தியோடு ஏகத்துக்கும் முரண்பட்டாலும் அவரின் மகன் சஞ்சய் காந்தி இறந்த பொழுது அவரை தேற்ற போன முதல் சில ஜீவன்களில் இவரும் ஒருவர்.

பாரத ரத்னா மற்றும் பாகிஸ்தானின் உயரிய விருதான நிஸான் இ பாகிஸ்தானி ஆகிய இரு விருதுகளையும் பெற்றவர்.

பிப்ரவரி 29 என்கிற அரிதான நாளில் பிறந்த இவர், வாழ்விலும்,அரசியலிலும் கூட அரிதான மனிதரே. அவரின் நினைவு தினம்  (ஏப்.9).

No comments:

Post a Comment