Search This Blog

Monday, April 8, 2013

பெண்களே கவனியுங்கள் கண்களை..!

கொஞ்சமாய் தலைக்கு எண்ணெய் வைத்து, மெல்ல மெல்ல மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து சீயக்காய் தேய்த்து ஒரு குளியல்போட்டால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்’ என்று உங்களிடம் நிறைய பேர் சொல்லியிருப்பார்கள். – ‘பெண் என்றால் கண்களுக்கு மைதீட்டவேண்டும். மைபோடுவது கண்களுக்கு நல்லது’ இப்படியும் சிலர் உங்களிடம் கூறியிருக்கக்கூடும்.

- ‘உச்சி முதல் பாதம் வரை உடைக்கு பொருத்தமாக அத்தனையையும் ஒரே கலரில் அணிந்து ‘மேக்-அப்’ செய்கிறோம். அதே கலரில் கண்களிலும் கலர் காண்டக்ட் லென்ஸ் போட்டுக்கொண்டால் பெண்களுக்கு செம லுக் கிடைக்கும்!’ என்றும் சிலர் சொல்வார்கள். இதெல்லாம் எந்த அளவுக்கு சரி? எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்தால் கண்களுக்கும் அது ஆரோக்கியம் என்று சொல்வது நம்பிக்கையும், விஞ்ஞானமும் பாதிக்கு பாதி கலந்த கலவை.

‘தலையில் நமது முடியின் வேரிலும் எண்ணெய்த் தன்மை இருக்கிறது. அதனால் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது தேவையற்றது’ என்ற கருத்து முன்பு இருந்தது. பின்பு நிலை மாறியது. ஆயில் தேய்த்து, மசாஜ் செய்து ஷாம்பு போட்டு குளித்தால் முடி அழகாக, ஆரோக்கியமாகிறது. கண்களுக்கும் பிரெஷ்னெஸ், குளிர்ச்சி கிடைக்கிறது என்ற கருத்து தற்போது நிலவுகிறது.

உண்மையில் நமது கண் இமைகளிலே எண்ணெய் உற்பத்தியாகிறது. Meibomean என்ற சுரப்பி கண் இமைகளில் ஆயிலை உற்பத்தி செய்கிறது. நாம் அடிக்கடி கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கிறோமே, அது சிரமமின்றி வழுவழுப்பாக இயங்கவும், கண்ணீரை பலப்படுத்தவும் அந்த ஆயில் அவசியமாகிறது. கண்மையால் கண்களுக்கு அழகு கிடைக்கும் என்பது உண்மை.

ஆனால் மையால் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைப்பதாக இதுவரை எந்த ஆய்வும் கூறவில்லை. கண்மையை கைக்குழந்தைகளுக்கு அதிகம் பயன்படுத்துகிறார்கள். வேலைக்கார பெண்ணிடம் வளர்க்கப்பட்ட – ஆறு மாத குழந்தைக்கு அழ அழ அந்த பெண், கண்களின் கீழ் இமையின் உள்ளே மை போட்டிருக்கிறார்.

அவரது அழுக்கடைந்த நீளமான நகம் மை போடும்போது குழந்தையின் கருவிழியை கீறிவிட்டது. உங்கள் குழந்தைக்கும் இந்த மாதிரி ஆபத்து ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ‘பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுவார்கள். அது அவர்கள் பலகீனம்’ என்று சொல்வார்கள். ஒருவிதத்தில் பெண்களின் அழுகை அவர்கள் கண்களுக்கு நல்லது. துக்க அழுகை, விபத்து அழுகை, மிதமான அழுகை போன்ற ஒவ்வொன்றின்தன்மைக்கு ஏற்ப கண்ணீரின் ரசாயனதன்மை மாறும்.

கண்ணீர் வெளியேறும்போது, கண்களில் உள்ள அசுத்தமும் சேர்ந்து வெளியேறும். அழுவது மூலம் அவர்கள் அந்த சோகத்தால் ஏற்படும் மனஅழுத்தத்தில் இருந்து விலகி, மன அமைதியையும் பெறுவார்கள். பெண்கள் அழுவதால் அவர்களுக்கு விழித்திரையில் தண்ணீர் கோர்க்கும் நோய் குறைவாக இருக்கிறது.

ஆண்கள் அழுகையை அடக்குவதால் விழித்திரையில் தண்ணீர் சேரும் ‘சி.எஸ்.ஆர்’ (சி.ஷி.ஸி.) என்ற நோய் ஆண்களை அதிகம் பாதிக்கிறது. ஆனால் பெண்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் அவர்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் சமச்சீரின்மையால் ‘சி. எஸ்.ஆர்’ பாதிப்பு ஏற்படக்கூடும்.

மாதவிலக்கு நிலைத்துபோகும் ‘மனோபாஸ்’ காலகட்டத்தில் பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகள் தோன்றும். அப்போது ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு போன்றவை இருந்தால் கண்பார்வையும் பாதிக்கப்படும். ரெட்டினாவும் ஏற்படலாம். அதனால் பெண்கள் 40 வயதுக்கு பிறகு கண் அழுத்தம், வெள்ளெழுத்து, ரெட்டினா போன்றவைகளுக்கான பரிசோதனைகளை ஒவ்வொரு வருடமும் செய்துகொள்ளவேண்டும்.

கம்ப்யூட்டரில் வேலைபார்ப்பவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்ற பாதிப்பு இப்போது அதிகம் ஏற்படுகிறது. கம்ப்யூட்டரை தொடர்ந்து அதிக நேரம் பார்ப்பதால் சுரப்பிகளில் இருந்து திரவம் வெளிவரும் வழி அடைபடும். அதனால் கண் உலர்ந்து, எரிச்சல், அரிப்பு ஏற்படும். 2 நிமிடம்கூட கண்களை திறக்க முடியாமல் அவதிப்படுவார்கள்.

பொதுவாகவே கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் கண்பாதுகாப்பு விஷயத்தில் மிக கவனமாக இருக்கவேண்டும். இளைஞர்களும், இளம் பெண்களும் கம்ப்யூட்டர் பணிகளில் சேருவதற்கு முன்பே கண்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கண்ணாடி அணியவேண்டும். டாக்டர்கள் அறிவுறுத்தும் கால இடைவெளியில் கண்களை தொடர்ந்து பரிசோதித்துக்கொள்ளவும்வேண்டும்.

கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் கண்களுக்கு போதுமான அளவு ஓய்வு கொடுக்கவேண்டும். 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக வேலை பார்த்ததும், கம்ப்யூட்டரில் இருந்து பார்வையை விலக்கி 20 வினாடிகள், 20 அடி தூரம் தள்ளி பார்வையை செலுத்த வேண்டும். பார்ப்பது இயற்கை காட்சியாக இருந்தால் நல்லது. இந்த ‘20க்கு 20 விதி’யை கடைபிடிப்பது கண்களுக்கு நல்லது.

கலர் கலராய் காண்டக்ட் லென்ஸ் அணிவதில் பெரும் புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது. ‘பவர்’ இல்லாதவைகளை ‘காஸ்மெட்டிக் கலர் காண்டக்ட் லென்ஸ்’ என்கிறோம். கிட்டத்தட்ட இவை எல்லா நிறங்களிலும் இருக்கிறது. நடிகைகள், மாடல்கள், பிரபலமான பெண்கள் தங்கள் உடைகளுக்கு தக்கபடியும், இரவு- பகல் போன்ற நேரத்துக்கு தக்கபடியும் கண்களில் பொருத்திக்கொள்கிறார்கள்.

‘பவர்’ உள்ள காண்டக்ட் லென்சில் ‘லைட் ப்ளூ’ மட்டுமே உள்ளது. காஸ்மெட்டிக் கலர் லென்ஸ்களை அளவோடு பயன்படுத்துவது நல்லது. காண்டக்ட் லென்ஸ்களை பொருத்தியபடி தூங்கக்கூடாது. கை, நகம் சுத்தமாக இருக்கவேண்டும். கவனமாக பொருத்தவும், எடுக்கவும் வேண்டும். லென்சை பொருத்திக்கொண்டு குளிக்கவும் கூடாது. பெண்கள் ‘மேக்-அப்’ போடுவதற்கு முன்பே காண்டக்ட் லென்சை பொருத்திவிடவேண்டும்.

கர்ப்பகாலத்தில் கருவிழியில் தண்ணீர் சேர்ந்து அடர்த்தி அதிகரிக்கும். அதனால் அப்போது காண்டக்ட் லென்ஸ் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பொதுவாக ஆண், பெண்களுக்கென்று தனித்தனி கண் நோய்கள் இல்லை. ஆனாலும் சமையல் அறை புகை படிதல், உலர்ந்து போதல் போன்றவை பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம்.

கண்களின் உள்ளே Aqueous Humour என்ற திரவம் உள்ளது. இது வெளியேறும் வழி சிறிதானால் ‘க்ளாக்கோமா’ நோய் பாதிப்பு தோன்றும். இதில் ஒருவகை யான ‘குளோஸ்டு ஆங்கிள் க்ளாக்கோமா’ பெண்களை அதிகம் தாக்குகிறது என்பது கவனிக்கத்தகுந்த விஷயமாகும். பிரசவகாலத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்தால் விழித்திரைக்கு பின்னால், ‘கோராய்டு’என்ற பகுதியில் பாதிப்பு ஏற்படலாம்.

பெரும்பாலும் பிரசவத்திற்கு பிறகு இது சரியாகிவிடும் என்றாலும், பெண்கள் இதில் கவனம் செலுத்துவது நல்லது. நீரிழிவு நோய் இருக்கும் பெண்கள் கர்ப்பத்திற்கு தயாராகும் முன்பே தங்கள் கண்களை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். ஏன்என்றால், அவர்கள் கர்ப்பிணியான பின்பு கண்பாதிப்பு அதிகமாகும்.

நீரிழிவு நோய் இருக்கும் பெண்கள் எல்லா காலகட்டத்திலும் கண்நலனின் தனிக்கவனம் செலுத்தவேண்டும். தற்போது கண் பரிசோதனை முறைகளிலும், சிகிச்சை முறைகளிலும் நவீனங்கள் புகுத்தப்பட்டிருக்கின்றன. கண்புரை, விழித்திரை, கருவிழி மாற்றுதல் போன்ற ஆபரேஷன்களிலும் நவீன சிகிச்சைமுறைகள் கையாளப்படுகின்றன.

இவைகளால் சீக்கிரமாகவே இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். கண்களின் ஆரோக்கியத்திற்கு இரவில் எட்டு மணிநேர தூக்கம் அவசியம். இரவில் நாம் தூங்கும் போது, சூழ்நிலையும் அதற்கு தக்கபடி வெளிச்சமின்றி அமைய வேண்டும். இரவில் பணிபுரிந்துவிட்டு பகலில் தூங்கும்போது தூக்கத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

மீன், பழவகைகள், கேரட், பொன்னாங்கண்ணி கீரை, குங்குமப்பூ, பாதாம் பருப்பு, வால்நட், மஞ்சள் நிற குடை மிளகாய் போன்றவை கண் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளாகும்.

No comments:

Post a Comment