Search This Blog

Sunday, April 7, 2013

அரிக்கமேடு புறக்கணிக்கப்படும் தமிழர் வரலாறு!



கடல் வாணிபத்தில் தமிழர்கள் எப்படி கொடிகட்டிப் பறந்தார்கள் என்பதற்கான சான்றுகள் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும், அதைக் கண்டெடுக்காமல், வரலாற்றைப் புறக்கணிப்பதன் மூலம் மாபெரும் தவறைச் செய்து வருகிறது இத்தலைமுறை.

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே இருக்கும் அரிக்கமேடு பகுதி வங்காள விரிகுடா கடலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் சிறு நகரம். கி.மு.200 முதல் கி.பி.200 வரை இங்கு வாணிபம் நடந்ததற்கான ஆதாரங்கள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன. அதிலும், ரோமானிய அரசன் அகஸ்டஸ் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், ரெடகோட்டா பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம், ரோமானியர்களுடனான வாணிபம் சிறந்து விளங்கியதை அறிய முடிகிறது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லெழாந்தீய், அரிக்கமேட்டின் சிறப்பை 1769-ல் நூலாக வெளியிட்டார். 1908-ல் பிரெஞ்சுக் கல்லூரியின் பேராசிரியர் ழவோ துய்ப்ராய், அரிக்கமேட்டுப் பகுதியில் சிறுவர்கள் வைத்து விளையாடிய பலவண்ண மணிகள், மட்பாண்ட ஓடுகளைச் சேகரித்தார். துய்ப்ராய் வேண்டுகோளின்படி, 1939-ல் வியட்நாமில் வந்த ஆய்வறிஞர் கொலுபேவ் ஆய்வின் பயனாக, அகஸ்டஸின் தலை பொறிக்கப்பட்ட கோமேதகப் பதக்கமும், ஒருபுறம் யானை உருவமும் மறுபுறம் சிங்கம் பொறிக்கப்பட்ட ரோமானிய நாணயங்களும் கிடைத்தன.

1944-ல் மார்ட்டின் வீலர் அரிக்கமேடு பகுதியில் அகழாய்வில் ஈடுபட்டார். 1949-ல் கசால் என்பவர் அரிக்கமேட்டு உண்மைகளைப் பிரெஞ்சு மொழியில் நூலாக வெளியிட்டார். 1980-ல் ஆய்வு செய்த, அமெரிக்காவின் பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விமலா பெக்லி, 1983-ல் கட்டுரை வெளியிட்டார். இதில் அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த சாயத்தொட்டி உறைகிணறு, மதுச்சாடி, பிராமி எழுத்து அமைந்த பானை ஓடு, யவனக் குடியிருப்பின் சுவர் பகுதிகளைப்பற்றி ஆராய்ந்து எழுதினார். இதன் விளைவாக, விமலா பெக்லி தம் குழுவினருடன் உருவாக்கிய அரிக்கமேடு தொடர்பான இரண்டு நூல் தொகுதிகள் அரிக்கமேட்டின் பெருமையைத் தாங்கியுள்ளன.

வெளிநாட்டினர் ஆர்வம்: அரிக்கமேட்டின் வரலாற்றை அறிந்துகொள்ள பிற நாட்டவர் அதிகம் ஆர்வம் காட்டினர். காரணம், அண்டை நாடுகளுடனான கடல் வாணிபத்தில் அங்கம் வகித்த பல துறைமுகங்களின் தொடர்ச்சியானதொரு துறைமுகமாக இந்த அரிக்கமேடு விளங்கியிருக்கிறது.

இத்தனை சிறப்புமிக்க இடத்தை, இந்திய தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், தற்போதைய நவீன காலத்துக்கேற்ற அகழ்வாராய்ச்சிகள் ஏதும் இங்கு நடைபெறவில்லை. ஏற்கெனவே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி இடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுவிட்டன. அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டதற்கான அடையாளம் மட்டுமே இங்கு தென்படும்.

அரியாங்குப்பம் ஆற்றின் கரையையொட்டி, சிதைந்த நிலையில் இருக்கும் அரிக்கமேடு சுற்றுச்சுவர் மூலம், மிகப் பெரிய வாணிகக் கப்பல்கள், கடலிலிருந்து கழிமுகம் வழியாக கடல்நீர் உள்வாங்கிய அரியாங்குப்பம் ஆற்றின் மூலம் பயணித்து, அரிக்கமேடு வரை வந்திருப்பதை உறுதிபடுத்துகிறது.
கடலை ஒட்டிய தேங்காய்த்திட்டு துறைமுகத்துக்கே தற்போது சிறிய கப்பல்களைக் கொண்டு வர முடியாமல், தரைதட்டிச் சிக்கிக்கொள்ளும் நிலையில் நமது தொழில்நுட்பத்தையும், மதிநுட்பத்தையும் வைத்திருக்கும்போது, அதற்கு பின்னால் 2 கி.மீ. தூரத்தில் இருக்கும் அரிக்கமேடு பகுதி வரை கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தி, வணிகம் செய்த வரலாறு நம் முன்னோர்களின் வரலாறு.

ஆனால் இந்த இடம் தற்போது புதர் மண்டிக் கிடக்கும் தோப்பு போல காட்சியளிக்கிறது. மரங்கள், செடி கொடிகள் மட்டுமே உள்ளன. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நம்பப்படும் கட்டடம் ஒன்று, இடிந்த நிலையில் காணப்படுகிறது. இதுவும் விரைவில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் நிலை ஏற்பட்டுவிடும். இந்த இடம் தற்போது சமூகவிரோதிகளின் பதுங்குமிடமாக மாறிப்போயிருக்கிறது.

இப்பகுதியில் தொல்லியல்துறையின் அருங்காட்சியகம் அமைத்து, ஏற்கெனவே அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த பொருள்களின் புகைப்படங்கள், அவற்றின் வரலாற்றுக் குறிப்புகள், அகழாய்வு செய்த இடங்களின் புகைப்படங்களைப் பார்வைக்கு வைக்கலாம். ஏற்கெனவே கண்டறியப்பட்ட வரலாற்று உண்மைகளை, ஆவணக் காப்பகத்தில் மட்டும் பத்திரப்படுத்தி வைத்திருப்பதால் பயனேதும் இல்லை. கல்வி பயிலும் அடுத்த தலைமுறையினர் இதை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கேற்ப, பிற மொழிகளில் எழுதப்பட்ட வரலாற்றுச் சிறப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும். இது ஆராய்ச்சி மாணவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் நமது நாட்டின் வரலாற்றைப் பறைசாற்றுவதாக இருக்கும்.

அதேபோல, கடற்கரை முதல் அரிக்கமேடு வரையிலான நீண்டதொரு, நவீன அகழாய்வின் மூலம் கடற்கரையில் புதையுண்ட நகரங்கள், வாணிப மையங்கள், கட்டடங்களைக் கண்டறிய முடியும் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். சுதந்திரத்துக்கு முன்பு பழைய முறையில் அகழாய்வு நடத்தியதால் கிடைத்ததைவிட, நவீன முறையில் மீண்டும் இப்பகுதியில் ஆராய்ந்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இங்கு அகழாய்வு நடத்த புதுச்சேரி அரசு பல முறை நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்தாலும், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.

அரிக்கமேடு பகுதியில் புதைந்திருக்கும் நமது உண்மையான, முழுமையான வரலாற்றை நாம் அறிய முடியவில்லை. இதற்கு காரணம் அலட்சியம் தவிர வேறில்லை. நமது முன்னோர்களைவிட, அதிநவீன தொழில்நுட்பம் வைத்திருக்கும் நாமே சிறந்தவர்கள் என்ற தற்பெருமையால், முன்னோரது அருமை தெரியாமல், நமது சொந்த வரலாற்றையும், அதன் பெருமைகளையும், அவர்கள் கடைபிடித்த தொழில்நுட்பங்களையும் புறக்கணிக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

http://dinamani.com/special_stories/article1301330.ece

No comments:

Post a Comment