Search This Blog

Friday, April 12, 2013

அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் வாழ்த்துகள்!


ஆறு காலங்களில் முதல் காலமான இளவேனிற்காலம் ஆரம்பிக்கும் சித்திரை முதலாம் நாள் (பொதுவாக ஏப்ரல் 13,14 அல்லது 15ல் ) முறைப்படி கதிரவன் மேட ராசியில் பயணம் செய்ய தொடங்கும் நாளையும் நேரத்தையும் தேர்வு செய்தே பழந்தமிழ் மக்களால் 'சித்திரைத்திருநாள்`' அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. பழந்தமிழர்கள் வாழ்வியலில் எவ்வாறாயினும் இறை நம்பிக்கை ஒன்றித்து இருந்ததை யாராலும் மறுக்க முடியாததல்லவா? இதனடிப்படையில் தமிழர்களிற்கு சித்திரை மாதம் ஒரு சிறப்பான மாதமாகவே தொன்று தொட்டு இருந்து வந்திருக்கின்றது..


(1) சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்திலேயே 'ஆலகால சிவன்' சித்திரம் ஒன்று வரைய அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றியதாகவும், சித்திரை மாதத்திலேயே நான்முகன் இந்த புவியை படைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

(2) சித்திரை மாதம் சுக்கில பட்ஷ அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக 'தேவி பாகவதம்' கூறுகிறது.

(3) சித்திரை மாத திருதியை திதியில் மகா விஷ்ணு மச்ச அவதாரம் (மீன் உருவம்) எடுத்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன. ஸ்ரீ ராமன் சித்திரை மாதத்தில்தான் அவதரித்தார். இருப்பினும் இந்தியாவில் பங்குனி மாத வளர்பிறையில் நவமி திதியிலேயே ராம நவமி கொண்டாடப்படுகிறது.

(4)சித்திரை முதலாம் நாள்தான் இந்து சமயக் கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்வுகள் நடத்தப் பெறுகின்றன. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் இந்நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெறும்.

(5)இதே சித்திரை முதலாம் நாள்தான் தமிழ் முனிவர் அகத்தியருக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான் உமாமகேஸ்வரி திருமணக் காட்சியைக் காட்டி அருளினர். இவ்விழா ஆண்டுதோறும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் சித்திரை விசுத்திருவிழாவின் போது நடைபெற்று வருகிறது. வேறு சில சிவத்தலங்களிலும் இவ்விழா நடத்தப் பெறுகிறது.

(6)சித்திரை மாதத்திற்கென்று மேலும் பல சிறப்புகளும் இருக்கின்றன. சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாம் பிறை தோன்றும் நாள் 'அக்ஷய திருதியை' என அழைக்கப்படுகிறது. இந்நாளில் வாங்கும் பொருள்கள் பன்மடங்காகப் பெருகும் என்கிற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களிடம் இன்றும் இருக்கிறது.

(7) இந்த காலத்தில்தான் இந்துக் கோயில்களில் பிரமோற்சவம் எனும் பெருவிழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் வரும் பௌர்ணமி அன்று மதுரை மாநகரில் சொக்கநாதர் மீனாட்சி திருமண நிகழ்வுகள் சித்திரை விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. மதுரை மாநகரில் இதே நாளில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.


மன்னர்கள் ஆட்சிக் காலத்தில், மதுரை மாநகரில், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் மூன்று தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டு இருக்கின்றன. மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடிவீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரைவீதிகள், சித்திரை வீதீகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள், அதையும் தாண்டி வெளியில் வந்தால் வெளி வீதிகள் என கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என நான்கு திசைகளிலும் கோயிலைச் சுற்றி மதுரை மாநகரின் தெருக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இன்றும் அப்படியே இருக்கின்றன.
இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்தந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும் என்பதுதான் இதன் சிறப்பு. இதில் சித்திரைத் திருவிழாதான் மிகச்சிறப்பு.
இத்தகவல்களெல்லாம் மூடநம்பிக்கை சார்ந்தவை என்று சிலர் குற்றம் சாட்டக் கூடும். இவை சிலருக்கு மூடநம்பிக்கையாகத் தோன்றினாலும் எமது மூதாதையர்களால் கொண்டாடப்பட்ட பெருவிழாக்களின் வரலாறுகளே இவை...!

No comments:

Post a Comment